திருவள்ளூரில் குழந்தைகள் இல்ல ஆற்றுப்படுத்துநர்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர் பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

பதிவு:2023-05-01 14:50:46



திருவள்ளூரில் குழந்தைகள் இல்ல ஆற்றுப்படுத்துநர்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர் பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூரில் குழந்தைகள் இல்ல ஆற்றுப்படுத்துநர்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர் பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் ஏப் 29 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சமூக பாதுகாப்பு துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக நடைபெற்ற குழந்தைகள் இல்ல ஆற்றுப்படுத்துநர்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

சமுதாயத்திற்கு ஒரு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த இல்லங்களை நடத்துகிறோம். அதே போல் இந்த பயிற்சியும் நடைபெறுகிறது.இந்த குழந்தைகள் இல்லங்களில் உட்கட்மைப்பு அல்லது நிதி பிரச்சனைகள் இருக்கலாம். நம் திருவள்ளுர் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகப்படியாக நல்ல இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. ஏதாவது சில இல்லங்களில் சிறிய அளவிலான பிரச்சனைகள் இருந்தாலும் அதனை திருத்த வேண்டும். ஏதாவது பிரச்சனைகள் சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 63 குழந்தைகள் இல்லங்கள் இயங்கி வருகிறது. இதில் 60 குழந்தைகள் இல்லங்கள் இளைஞர் நீதிச் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற இல்லமாகும். மின் வத்சால்யா நெறிமுறைகளின்படி 50 குழந்தைளுக்கு 14 பணியாளர்கள் இருக்க வேண்டும். 7 குழந்தைகளுக்கு 1 கழிவறையும், 10 குழந்தைகளுக்கு 1 குளியலறையும் இருக்க வேண்டும். இல்லத்தில் ஒரு குழந்தை தங்க 40 சதுர அடி இருக்க வேண்டும். கட்டிட உறுதிச்சான்றிதழ், கட்டிட உரிமச்சான்றிதழ், சுகாதாரச்சான்றிதழ் தீயணைப்புத்துறையினரிடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச்சான்றிதழ் ஆகிய சான்றிதழ்கள் நடைமுறையில் இருக்க வேண்டும்.

புதிய தாய் இல்லத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளை குழந்தை நலக்குழுவின் ஆணை பெறாமல் இல்லத்தில் அனுமதிக்க கூடாது. மின் வாட்சால்யாவின் வழிகாட்டுதலின் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தகுதி வாய்ந்த பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். அவ்வாறு பணியமர்த்தும் முன் பணியாளர்கள் காவல் துறையிலிருந்து நன்னடத்தை சான்றிதழ் பெற வேண்டும். நன்னடத்தை சான்றிதழ் இல்லாத ஒரு பணியாளரும் குழந்தைகள் இல்லத்தில் அனுமதிக்கக்கூடாது.

குழந்தைகள் இல்லங்கள் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் பார்வையாளர் பதிவேட்டிலோ அல்லது கடிதமாகவோ கொடுக்கப்படும் அனைத்து குறிப்புகளுக்கும் கட்டாயம் 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் பதில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை துணை இயக்குனர் கே.விஜயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.நிஷாந்தினி, குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்ஸிலியா, குழந்தைகள் நல அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.