பதிவு:2023-05-02 12:26:34
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் : வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
திருவள்ளூர் மே 02 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியின் தலைவர் சுனிதா பாலயோகி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துணைத் தலைவர் ஆர்.மோகனசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் இ.தினேஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் நா.வெங்கடேசன், பா.யோகநாதன், ஊராட்சி செயலர் எம்.ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை, பிற துறை சார்ந்த பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிளாஸ்டிக் அற்ற ஊராட்சியை உருவாக்குதல் மற்றும் தூய்மை பாரத இயக்கம் குறித்து விவாதிக்ப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைத்து புதிய மின் விளக்குகள் அமைக்கப்படும். சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடையால் அடிக்கடி விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுவதால் மாற்று இடத்தில் டாஸ்மாக் கடையை அமைக்க வேண்டும், மின்சார தகன மேடை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் வார்டு உறுப்பினர்கள் தா.தங்கம்மாள், சி.ஆர்.குமரன், ச.சு.மோகன்குமார், ஈ.டில்லி, ஜெ.ஜெயந்தி, ஜி.சுதா, மி.ஜான்சிராணி, ல.ரம்யா, ஜி.ஜானகிராமன், ப.கோவிந்தம்மாள், ஆர்.வள்ளி, நா.நந்தகோபால், வெ.அழகுநிலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.