பதிவு:2023-05-04 21:43:14
திருவாலங்காடு இந்தியன் வங்கியில் மகளிர் சுய உதவி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் வங்கியின் முன்பு மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
திருவள்ளூர் மே 04 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சியில் மரிக்கொழுந்து என்கின்ற மகளிர் குழு செயல்பட்டு வருகிறது. இந்த மகளிர் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இதே ஊரில் உள்ள இந்தியன் வங்கியில் கணக்குகள் தொடங்கி கடன் பெற்று வந்தனர். இந்த மகளிர் குழுவினர் 8 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்துள்ளனர். இதனால் வங்கிக்கு செலுத்த வேண்டிய மீதி பணம் ரூ.4.5 லட்சம் கட்டுவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
ஆனால் அதை மீறி வங்கியின் மேலாளர் இந்த மகளிர் குழு சார்ந்த 12 பெண்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால், மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த மகளிர் குழுவை சேர்ந்த 20 பெண்கள் ஒன்று கூடி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து பணம் வங்கியில் முழுமையாக செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் என்று எதையும் ஆராயாமல் வங்கி மேலாளர் மகளிர் குழுவை மதிப்பதில்லை என்று குற்றச்சாட்டை வைத்து இந்தியன் வங்கி முன்பு மகளிர் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென்று இந்த மகளிர் குழுவை சேர்ந்த துர்கா என்ற பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் வருவாய் துறை சார்ந்த ஒரு பெண் அதிகாரி தற்கொலை முயற்சி செய்த துர்கா என்ற பெண்ணை மீட்டனர். இதனால் தற்கொலை முயற்சி செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது, உடனடியாக போலீசார் வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை செய்து மகளிர் குழுவுக்கு உரிய நடவடிக்கை விரைவாக எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் அந்த பகுதியிலிருந்து கலைந்து சென்றனர்.