பதிவு:2023-05-11 15:34:13
மீஞ்சூரில் விஷவாயுத்தாக்கி உயிரிழந்த இருவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை மற்றும் அரசு பணி நியமன ஆணைகள் : தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் வழங்கினார்
திருவள்ளூர் மே 10 : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி, இம்மானுவேல் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் கடந்த மே-1ம் நாள் கழிவுநீர் தொட்டியில் உள்ள கழிவுகளை அகற்றும் போது விஷவாயுத்தாக்கி இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதியை தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக கழிவுநீர் தொட்டியில் உள்ள கழிவுகளை அகற்றும் போது விஷவாயுத்தாக்கி உயிரிழந்த இருவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை மற்றும் அரசு பணி நியமன ஆணைகளையும் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் இரண்டு தூய்மை பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தார்கள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை கிடைக்க முழு முயற்சி எடுத்துள்ள மாவட்ட ஆட்சியரை நான் வெகுவாக பாராட்டுகிறேன். இறந்தவர்களில் கோவிந்தன் என்ற தூய்மை பணியாளர் அரசு பணியாளர் என்பதால் அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக ரூ.15 லட்சம் வழங்கப்பட வேண்டும். மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டம் சார்பாக அவருக்கு ரூ.12 லட்சம் வழங்கப்பட வேண்டும் அதில் தற்பொழுது ரூ.6 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.5 லட்சம் ரூபாய் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஈமச்சடங்கு செய்வதற்காக ரூ.25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அத்தொகை முன்னதாகவே குடும்பத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. அவர் காப்பீடு செய்துள்ள காரணத்தினால் தலா ரூ.2 லட்சம் விதம் ரூ.4 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது ஆக மொத்தம் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 36 லட்சத்து 25 ஆயிரம் நிவாரண தொகையாக கிடைக்க வாய்ப்புள்ளது அதில் இன்று ரூ6 லட்சம் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக இறந்த நபர் சுப்பராயலு. அவர் தற்காலிக பணியாளராக பணிபுரிந்துள்ளார். அவருக்கும் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து ரூபாய் 15 லட்சம் வழங்கப்பட வேண்டியுள்ளது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சார்பாக 12 லட்சம் வழங்கப்பட வேண்டியது அதில் தற்பொழுது ரூபாய் 6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்காலிக பணியாளர் என்பதால் தாட்கோ சார்பாக ரூ 5 லட்சமும் இன்று வழங்கப்பட்டுள்ளது. இவர் காப்பீடு செய்யாததால் காப்பீட்டுத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை ஆகமொத்தம் இவரது குடும்பத்திற்கு ரூ33 லட்சத்து 25 ஆயிரம் கிடைக்க வாய்ப்புள்ளது அதில் இன்று ரூபாய் 11 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு குடும்பத்தை சேர்ந்தவருக்கும் அவர்களின் வாரிசுதாரர்களின் கல்வித் தகுதிக்கேற்றார் போல் ஒருவருக்கு பில் கலெக்டர் பணியும் மற்றொருவருக்கு தூய்மை பணியாளர் பணிக்கான நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது என தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் தெரிவித்தார்.
இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன்,செங்குன்றம் காவல் துணை ஆனணயர் நெ. மணிவண்ணன்,உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) எம். மாஹின் அபுபக்கர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, மாவட்ட மேலாளர் தாட்கோ இந்திரா, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், பொன்னேரி வட்டாட்சியர் எஸ்.செல்வகுமார், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலன்) சித்ரா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.