"சிறகுகள் 200" என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு 7 நாட்கள் உண்டு உறைவிட கோடைகால சிறப்பு முகாம்

பதிவு:2023-05-11 15:39:26



பூவிருந்தவல்லி, எஸ்.கே.ஆர்.பொறியியல் கல்லூரியில் "சிறகுகள் 200" என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு 7 நாட்கள் உண்டு உறைவிட கோடைகால சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் மே 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சுய சிந்தனையையும், தொலைநோக்கு பார்வையும் வளர்க்கும் விதமாகவும் செயல்பட்டு வரும் "சிறகுகள் 200" என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு பூவிருந்தவல்லி, எஸ்.கே.ஆர்.பொறியியல் கல்லூரியில் அறிவியல், கணினி அறிவியல், நாடகக்கலை, நடனம், பாட்டு, தற்காப்பு கலை, குறும்படம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து சிறப்பு நிபுணர்கள் மூலம் மே 10 முதல் மே 16 வரையிலான 7 நாட்கள் நடைபெறவுள்ள உண்டு உறைவிட கோடைகால சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, மாணவ மாணவியர்களோடு கலந்துரையாடி, ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

இன்றையிலிருந்து 7 நாட்கள் தங்கி இப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஆர்வமுடன் வந்துள்ளீர்கள். காலையிலிருந்து உடற்பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், ஸ்போக்கன் இங்க்லீஸ் என நாள் முழுவமும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் நடைபெறும் நாட்களில் இடைப்பட்ட நாட்களில் நானும் இங்கு வந்து ஆய்வு செய்வேன். இது தொடர்பாக பயிற்சி ஆட்சியரும் இங்கு வருவார்கள்.

எனவே, நாம் முதலில் பெரிய அளவில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்க வேண்டும். அப்பொழுது தான்; அந்த உயர்வான இலக்கையும் அடைய முடியும். தானாக எதுவும் நடைபெறாது. நாம் கஷ்டப்பட்டு செயல்பட்டால் தான் நாம் நினைத்தது நடக்கும். அதற்கு என்னென்ன முயற்சிகள் தேவையோ அம்முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அதற்காகத்தான் இந்த சிறப்பு பயிற்சி முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்படுகிறது.

இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாவட்ட ஆட்சியராகவும், காவல் கண்காணிப்பாளராகவும் என பல உயர்ந்த பதவிகளில் நீங்கள் வர வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் ஆசிரியர்கள் உங்களை இப்பயிற்சிக்கு அழைத்து வந்துள்ளார்கள். எனவே, இந்த 7 நாட்கள் உங்கள் அனைவருக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

ஏதேனும் தேவைகள் என்றால் பயிற்சி ஆட்சியர் வரும் போது அவர்களிடம் தெரிவிக்கலாம். நீங்களும் 20-25 வருடங்கள் கழித்து இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறும் போது இந்த பயிற்சி பற்றி நீங்களும் ஒரு உயர்ந்த நிலையில் இருந்து சொல்ல வேண்டும் என்பது தான் மாவட்ட ஆட்சியராக என்னுடைய கருத்து, என்னுடைய ஆசை. மேலும், இப்பயிற்சியை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற என என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இப்பயிற்சி துவக்க விழாவில், உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, எஸ்.கே.ஆர்.பொறியியல் கல்லூரி தலைவர் ராமதாஸ், செயலாளர் சுரேஷ் பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.பவானி, மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்