பதிவு:2023-05-11 15:41:12
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியில் Y-20 திருவள்ளூர் 2023 நிகழ்ச்சியின் கீழ் " ஆரோக்கியம், நல்வாழ்வு, விளையாட்டு " ஆரம்ப விழா
திருவள்ளூர் மே 11 : திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிரம்ம குமாரிகள் சமூக மற்றும் ஆன்மீக தொண்டு நிறுவனத்தின் இளைஞர் பிரிவு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் Y-20 திருவள்ளூர் 2023 நிகழ்ச்சியின் கீழ் " ஆரோக்கியம்,நல்வாழ்வு,விளையாட்டு" ஆரம்ப விழா நடைபெற்றது.விழாவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு Y-20 திருவள்ளூர் 2023 நிகழ்ச்சியின் போஸ்டர்களை வெளியிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் அனைவரின் தன்னம்பிக்கை மற்றும் அவரவர் திறமைகளை மேம்படுத்தும் வகையில் இளைஞர்களிடையே பரவியிருக்கும் போதை பழக்கம் மற்றும் மல்டி - மீடியா மோகம் ஆகியவற்றிலிருந்து விலகி தனது நேரம் மற்றும் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி சமூக பொறுப்போடு இருக்க தியானத்தின் முக்கியத்துவம் குறித்து புதுவை ராஜயோக ஆசிரியை பிரம்ம குமாரி கவிதா அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், நினைவாற்றல்,கூர்ந்து கவனித்தல் குறித்து இரண்டு சிறு கதைகள் மூலம் விளக்கவுரையாற்றினார். முன்னதாக அனைவரின் தன்னம்பிக்கை மற்றும் அவரவர் திறமைகளை மேம்படுத்தும் வகையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி, ஊழியர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துணை முதல்வரும், பேராசிரியருமான திலகவதி,ஏ.பி.எஸ் குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இதில் ராஜயோக ஆசிரியை பிரம்ம குமாரிகள் ஜெயலட்சுமி (திருவள்ளூர்), பத்மா (பூந்தமல்லி),200 க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி, ஊழியர்கள் கலந்து கொண்டனர்.