பதிவு:2023-05-14 19:15:46
திருவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் : அப்புறப்படுத்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் :
திருவள்ளூர் மே 13 : திருவள்ளூர் மாவட்டம் திருவூர் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 10 வருடங்களாக பார்த்திபன் என்பவர் எந்த ஒரு பராமரிப்பும், வழிகாட்டுதலும் இல்லாமலும், அரசாங்கத்தில் எந்த ஒரு முன் அனுமதி பெறாமலும் பன்றிகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.
அதனால் அங்கு சுற்றித் திரியும் பன்றிகளால் அப்பகுதி பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் திருவூர் கிராமம் அருகில் கூவம் ஆறு இருப்பதால்,குடிநீர் பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் நீரும் அசுத்தமாகிறது. மேலும் கிராமத்தில் இருக்கும் விவசாய நிலங்களும், அதில் விளைவிக்கும் பயிர்கள் மற்றும் காய்கறிகள் இந்த பன்றிகளால் சேதமடைந்து,விவசாயிகளுக்கு பெறும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அப்பன்றிகள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிவதால் எண்ணற்ற விபத்துகள் ஏற்படுகிறது. இது குறித்து பன்றிகளை வளர்த்து வரும் பார்த்திபனிடம் ஊர் பொதுமக்கள் நேரில் சென்று கேட்டதற்கு, நான் அப்படி தான் பன்றிகளை வளர்ப்பேன், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், அந்த பன்றிகளை வளர்க்கும் பார்த்திபன் பன்றிகள் உண்ண, காய்கறிகள் மற்றும் மனித கழிவுகளை ஆற்றங்கரையோரம் கொட்டுவதால் குடிநீர் மாசு படுவதோடு மட்டுமல்லாமல், அந்த கழிவுகளை அருந்தும் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்தும் போயின.
எனவே திருவூர் கிராமத்தின் நீர் ஆதாரத்தையும் மற்றும் விவசாயம், மற்றும் நோய் தொற்று மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரியும் பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் புகார் அளித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறதி அளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.