பதிவு:2023-05-15 18:03:09
வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகரில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகை, ரூ.1.25 லட்சம் ரொக்கம் கொள்ளை :
திருவள்ளூர் மே 15 : திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியும் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் நிலையில் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவர்களது குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகளை அழைத்து வருவதற்காக நேற்று இரவு (13-ந் தேதி) சண்முகம் மற்றும் அவரது மனைவி சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் செல்போன் மூலம் சண்முகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 சவரன் நகை மற்றும் குழந்தைகளுக்காக பள்ளி கட்டணம் கட்டுவதற்காகவும், குடியிருப்போர் நல சங்கத்தின் சந்தா பணம் வைத்திருந்தது என 1.25 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து செவ்வாப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் மேலும் சண்முகம் வசிக்கும் தெருவில் அருகிலேயே இரவு 2 மணி அளவில் இரண்டு இளைஞர்கள் வீடுகளை நோட்டமிட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அதே இரவில் மேலும் 3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.