பதிவு:2022-04-30 22:37:03
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி ரூ.1 1/2 கோடி வாங்கி மோசடி செய்ததாக திமுக பொதுக்குழு உறுப்பினர் மீது ஆன்லைனில் பாதிக்கப்பட்டவர் புகார் : மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை :
திருவள்ளூர் ஏப் 28 : திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் வி.சி.ஆர் குமரன். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இவர் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் வி.சி.ஆர். குமரன் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் மகள் அபிதாவுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் வாங்கி உள்ளார்.
ஆனால் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தராமலும் வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நவநீத கிருஷ்ணன் பல முறை தொடர்பு கொண்டு பேசிய போதும் உரிய பதில் இல்லாததால் இது குறித்து நவநீதகிருஷ்ணன் ஆன்லைனில் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ஒன்றரை கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவ கல்லூரியில் இடமும் வாங்கித் தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றிய திமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.