பதிவு:2023-05-17 10:17:01
பூந்தமல்லி ஒன்றியம் நேமம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் : பூந்தமல்லி எம்எல்ஏ, ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் மே 16 : தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ”நம்ம ஊரு சூப்பரு” எனும் துாய்மைக்கான மக்கள் இயக்கம் கடந்த மே 1-ந் தேதி கிராம சபைக் கூட்டங்களில் செயல்படுத்த தொடங்கியது.
”ஒன்றிணைவோம், பசுமையும் துாய்மையும் நமதாக்குவோம்”- என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த மக்கள் இயக்கத்தின் நோக்கம் சமுதாயத்தின் அனைத்து பங்கேற்பாளர்களின் பங்களிப்புடன் பொது இடங்களில் உள்ள கழிவுகளை அப்புறபடுத்துத்துதல், பொதுக் கட்டிடங்களை துாய்மையாக பராமரித்தல், அனைத்து வீடுகளிலும் குப்பைகளை தரம் பிரித்தல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்தல் – மாற்று பொருள் பயன்படுத்துதல், திரவக்கழிவு மேலாண்மை, சுத்தமான குடிநீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த முயற்சிகள், ஊட்டச்சத்து தோட்டங்கள் வளர்த்தல் மற்றும் பசுமை கிராமமாக மாற்ற மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முன்முயற்சிகளை உள்ளடக்கியதாகும்.
அதன்படி பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நேமம் ஊராட்சியில் நடைபெற்ற நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு தலைமை தாங்கினார். பூந்தமல்லி ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், காந்திமதிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் பூந்தமல்லி எம்எல்ஏ. ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, ஊராட்சி மக்களிடம் குப்பையினை தரம் பிரித்து வாங்குதல், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து ஊராட்சியில் சுகாதாரத்தை நிலை நிறுத்துதல் குறித்து வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து எங்கள் கிராமம், எழில்மிகு கிராமம் என்ற தலைப்பில், நான் எப்போதும் மலம் கழிக்க கழிப்பறையை மட்டுமே பயன்படுத்துவேன், குப்பைகளை தரம்பிரித்து தூய்மை காவலர்களிடம் வழங்குவேன். என் குப்பை என் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன். எனது வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரை தெருக்களில் தேங்கவிடாமல் பாதுகாப்பாக அகற்றுவேன்.
எப்போதும், எனது சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பேன். கடைகளுக்கு வெளியே செல்லும் போது துணிப்பையை உடன் எடுத்துச் செல்வேன். எனது கிராமத்தை எழில்மிகு கிராமமாக மாற்றும் முயற்சியில் நான் பங்கேற்பதுடன் என குடும்பத்தினரையும் பங்கேற்க வைப்பேன் என எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி உறுதிமொழி வாசிக்க அதனை தூய்மைப் பணியாளர்கள், பொது மக்கள், ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ பயிற்சி அதிகாரி டாக்டர் பி.எஸ்.ராமகிருஷ்ணன் திமுக நிர்வாகிகள் என்.பி.மாரிமுத்து, கந்தன், சுகுமார், குணா, சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.