பதிவு:2023-05-17 11:16:00
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகன் மீது பொய்வழக்கு போடுவதாக கூறி காவல்துறையினரை கண்டித்து குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு :
திருவள்ளூர் மே 16 : திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடர்மணி. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகன் நவீன் குமார் அம்பத்தூர் ஐடிஐ-யில் படித்துவிட்டு 2 வருடங்களாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பக்கத்து ஊரான வலசை வெட்டி காடு கிராமத்தில் அடிதடி பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வெங்கத்தூரைச் சேர்ந்த வேண்டாத ஒரு சிலர் மகன் நவீன்குமாரின் பெயரையும் அடிதடி வழக்கு சம்மந்தமாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அது தவறான தகவல் எனச் சொல்லி அந்த வழக்கு சம்மந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இதனிடையே மகன் நவீன்குமார் எந்தவிதமான தவறான செயல்களிலோ,சட்டத்திற்கு புறம்பான செயல்களிலோ ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்கிறோம் என்று தன் மகனை அடிக்கடி அழைத்து செல்வது வழக்கமாகிப் போனது. விசாரணை என்ற பெயரில் தனது மகனின் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
நாங்கள் சென்று வாகனத்தை கேட்ட பொழுது, உங்கள் மகன் மீது 110 வழக்கு போட்ட பிறகுதான் திருப்பி தருவோம் என கூறயுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த சுடர்மணி, செல்வி குடும்பத்தினர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அப்பொழுது பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தனது மகன் மீது பொய்யான வழக்குகளை போடுகின்றனர். மகன் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்தால் வழக்குகளை போடுங்கள். இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதால் இது போன்ற வழக்குகளால் அவனுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.