பதிவு:2023-05-17 11:18:30
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் மே 16 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 136 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 47 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 25 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 79 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 60 மனுக்களும்; என மொத்தம் 347 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறமை மேம்பாட்டு துறை சார்பாக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து பணியிடத்தில் விபத்து காரணமாக உயிரிழந்த ஒரு கட்டுமான தொழிலாளியின் குடும்பத்தாருக்கு உதவி நிதி ரூ.5 இலட்சம் பெறுவதற்கான ஆணை மற்றும் காசோலையையும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் சிறப்பாகவும் பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரிந்த நியாய விலை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 5 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மார்களுக்கு சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தலா ரூ. 8,000 வீதம் ரூ.40,000 மதிப்பீட்டிலான 5 மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், ஐந்து நபர்களுக்கு மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான பாதுகாவலர் நியமன சான்றுகளையும், மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து மனு வழங்கிய ஒரு மாற்றுத்திறனாளியின் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக பரிசீலனை செய்து அம்மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து உதவித்தொகையாக ரூ.10,000 யை வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கமலா, துணை ஆட்சியர் (பயிற்சி) சுபலட்சுமி, பேச்சுப் பயிற்சியாளர் சுப்புலட்சுமி, முட நீக்கு வல்லுநர் ஆஷா, சைகை மொழி பெயர்ப்பாளர் சசிகலா, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.