பதிவு:2023-05-17 12:57:31
திருவள்ளூரில் பலத்த சூறைக்காற்றுடன் மழை : 150 ஆண்டு கால கோயில் வேப்ப மரம் சாய்ந்தது : மின்கம்பம் சாய்ந்ததில் 30-க்கும் மேற்பட்ட மாடுகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியது :
திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 முதல் 104 டிகிரி வரையிலான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது,
மேலும் பலத்த சூறைக்காற்றில் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரில் தனி நபருக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் மின் கம்பம் சாய்ந்து மாடுகளின் மேல் விழுந்தது, மின்கம்பம் சாய்ந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் 30-க்கும் மேற்பட்ட மாடுகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியது.
மேலும் திருவள்ளூர் முகமது அலி தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற கோலம் கொண்ட அம்மன் கோவிலின் 150 ஆண்டு பழமை வாய்ந்த கோயில் வேப்ப மரம் அடியோடு சாய்ந்தது, அதேபோல் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரராகவர் கோயில் பின்புறம் கோவில் கலசத்தில் இடிதாக்கி கலசம் கருகியது,
அதேபோல் திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தகடுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர், மேலும் திருவள்ளூர் அடுத்த ஒதப்பை பகுதியில் தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.இதுபோல் மிதமான மழை பெய்தாலும் பலத்த சூறைக்காற்று மற்றும் இடி தாக்கியதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.