150 ஆண்டுகால வேப்பமரம் சூறாவளி காற்றில் சாய்ந்தது

பதிவு:2023-05-18 20:02:00



திருவள்ளூர் கோலம் கொண்ட அம்மன் கோயிலில் உள்ள 150 ஆண்டுகால வேப்பமரம் சூறாவளி காற்றில் சாய்ந்தது : பக்தர்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் அதே இடத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் மரம் நடப்பட்டது

150 ஆண்டுகால வேப்பமரம் சூறாவளி காற்றில் சாய்ந்தது

திருவள்ளூர் மே 18 : திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் முகமது அலி தெருவில் உள்ளது கோலம் கொண்ட அம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் தீ மிதி திருவிழா, ஜாத்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். திருவள்ளூர் நகர மக்கள் அனைவரும் இந்த கோலம் கொண்ட அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்து சமய அறநிலையை துறைக்கு சொந்தமான இந்த கோவில் 150 ஆண்டு கால பழமை வாய்ந்த கோவிலாகும்.இந்த கோவில் வாசலில் வேப்பமரம் ஒன்றும் உள்ளது. இந்த வேப்ப மரத்திற்கும் பக்தர்கள் மஞ்சள் குங்குமம் இட்டு தெய்வத்தை போல் வணங்கி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூரில் பெய்த சூறாவளி காற்றில் இந்த வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மீண்டும் அதே இடத்தில் மரம் நட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி உத்தரவின் பேரில் கோயில் தக்கார் பிரகாஷ், மற்றும் வேளாண்மை துறை சார்பில் விஜயகாந்த், மின்சாரத் துறை சார்பில் உதவி பொறியாளர் தட்சிணா மூர்த்தி உள்பட அதிகாரிகள் இந்த மரம் நடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வேரோடு சாய்ந்த வேலை வேப்ப மரத்தை மீண்டும் அதே இடத்தில் புதைப்பதற்காக அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு வேர்கள் ஊடுருவும் பகுதி வரை ஆழமாக பள்ளம் தோண்டி மரத்தை நிற்க வைத்தனர். மரம் மின்கம்பத்தின் மீது படாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்வாரிய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் பரிந்துரையின் பேரில் காப்பர் ஆக்சி குளோரைடு 50 சதவிகித சத்து பவுடர் அரை கிலோவில் வேரின் அடி பாகம் நன்கு நனையும்படி மெழுகு பதத்தில் பூசிய பின்பு நடவு செய்ய பரிந்துரைத்தார். மேலும், மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் இட்டு நடவு செய்ய பரிந்துரை செய்ததின் பேரில் மரத்தை நடவு செய்தனர்.

4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மரம் கீழே விழாமல் இருக்க 2 கிரேன் இயந்திரங்கள் மற்றும் பள்ளம் தோண்ட 1 பொக்லைன் இயந்திரம் கொண்டு மரத்தை நடவு செய்தனர். பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் அந்த வேப்ப மரத்தை நட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமம் விட்டு வழிபட்டு சென்றனர்.