பதிவு:2023-05-18 20:10:22
திருவள்ளூர் மாவட்டத்தில் 19.05.2023 அன்று அனைத்து வருவாய் கோட்டங்களிலும், 26.05.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் மே 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 26.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் வருவாய் கோட்ட அளவில் 19.05.2023 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு திருவள்ளூர், பொன்னேரி மற்றும் திருத்தணி வருவாய் கோட்டங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண அந்தந்த வருவாய் கோட்டாங்களிலும் மாவட்ட ஆட்சியரகத்திலும் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இக்கூட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 26.05.2023 அன்று நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றியும் முககவசம் அணிந்தும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.