பதிவு:2023-05-19 12:30:31
திருவள்ளூர் நகராட்சி புங்கத்தூரில் 5.75 ஏக்கர் அரசு புறம்போக்கு குட்டை கால்வாய் அதிரடி மீட்பு : நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை :
திருவள்ளூர் மே 19 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் உள்ள புங்கத்தூரில் அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு குட்டை மற்றும் கால்வாயை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்வதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் தனித்தனி வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு அதன்படி ஒரு சிலர் அளவீடு கல் போட்டுள்ளனர். ஒரு சிலர் சுற்றுச்சுவரும் எழுப்பி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறையினருக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி மற்றும் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நகராட்சிக்கு சொந்தமான 5. 15 ஏக்கர் குமாரசாமி குட்டை மற்றும் 60 சென்ட் கால்வாய் பகுதியை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்து மீட்டனர். மேலும் இது நகராட்சிக்கு சொந்தமான குட்டை புறம்போக்கு நிலம். இதனை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.