பதிவு:2023-05-19 12:40:36
இம்மானுவேல் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் நிவாரணம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் மே 19 : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் இம்மானுவேல் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த மே 1-ந்தேதி கழிவு நீர் தொட்டியில் கழிவுகளை அகற்றும் போது எதிர்பாரத விதமாக விஷவாயு தாக்கி கோவிந்தன் மற்றும் சுப்பராயலு ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு அப்பள்ளி நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்கவும் முன்வந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று பள்ளி நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்ஸ்சாண்டர், செயல் அலுவலர் வெற்றியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.