பதிவு:2023-05-22 15:51:02
திருவள்ளூர் அடுத்த அதிகத்தூரில் தொடர் மின்வெட்டு காரணமாக பொது மக்கள் அவதி : மணவாளநகர் துணை மின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவள்ளூர் மே 22 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிகத்தூர் கிராமத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிராம மக்கள் மணவாள நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகத்தூர் கிராமத்தில் தொடர்ந்து இரவு நேரம் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் குறைந்தது ஆறு மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் தொடர்ந்து நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இப்பகுதியின் அருகே உள்ள தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் மாற்றி அனுப்பப்படுவதாகவும் இதனால் கிராமப்புறங்களில் மின்சாரம் தடைப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து இது குறித்து மின்சார வாரிய அலுவலர் அதிகாரியை தொடர்பு கொண்டால் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு பலனும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த பகுதியின் மின்வெட்டை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.