பதிவு:2023-05-24 15:27:17
குடி போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய நபரால் பயணிகள் அலறல்.. திருத்தணி பேருந்து நிலையத்தில் பரபரப்பு :
திருவள்ளூர் மே 24 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, வேலூர், திருப்பதி, உட்பட வெளியூர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு தினமும் 300- க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருத்தணி பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் செல்ல பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள நேர காப்பாளர் அறைக்கு சென்று பதிவேட்டில் கையொப்பமிட சென்றுள்ளனர்.
அப்போது போதை ஆசாமி ஒருவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை ஓட்ட முயற்சி செய்துள்ளார். பேருந்து சிறிது தூரம் நகர்ந்து சென்றதும் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அப்போது அங்கிருந்த சக ஓட்டுனர்கள் சாமர்த்தியமாக பேருந்தை பிரேக் பிடித்து நிறுத்தியதால் எதிரே இருந்த பேருந்து மீது மோதாமல் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் அந்த போத ஆசாமியை ஓட்டுனர்கள் நடத்துனர்கள் தர்ம அடி கொடுத்து திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வருவதற்கு தாமதம் ஆனதால் போதை ஆசாமி அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார் இதனால் திருத்தணி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இரவு நேரத்தில் போதை ஆசாமிகள் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.