பதிவு:2023-05-30 10:37:56
அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவுக்கான வழியை முள்வேலி அமைத்து வழி விட மறுப்பு : பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு :
திருவள்ளூர் மே 30 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் அல்லிக்குழி கிராமத்தை சேர்ந்த கௌரி மற்றும் அவரது மாமியார் யசோதா ஆகியோருக்கு கடந்த 2011-இல் அரசு தலா 2.5 சென்ட் வீட்டு மனை வழங்கியது. ஆனால், அந்த இடத்திற்கு செல்லும் வழிப்பாதையை இரு புறமும் முள்வேலி அமைத்து அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலையை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.டி.பாஸ்கர் ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 22-ஆம் தேதி எஸ்பி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த யசோதா (60) மற்றும் அவரது மகன் கோபி (40) ஆகிய இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக அங்கு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றி அவர்கள் இருவரின் உடலிலும் தண்ணீரை ஊற்றி மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து புகாரை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உறுதியளித்ததையடுத்து யசோதா மற்றும் அவரது மகன் கோபி ஆகியோர் அங்கிருந்து சென்றனர்.