பதிவு:2023-05-30 11:14:04
திருவள்ளூர் அடுத்த வயலூரில் நண்பர்களுடன் இணைந்து ஏரியில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் :
திருவள்ளூர் மே 30 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் தினேஷ்குமார் , பிரசன்னா உட்பட 7 பேர் இன்று காலை வயலூர் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெற்றிவேல் (15),தினேஷ்குமார் (14) இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஏரியின் ஆழமான பகுதியில் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளனர்.. நீண்ட நேரமாக தினேஷ்குமாரும், வெற்றிவேலும் வெளியே வராததை கண்ட சக நண்பர்கள் ஏரியின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தினேஷ்குமார் வெற்றிவேல் இருவரையும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் சேற்றில் சிக்கியதால் சிறுவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மப்பேடு போலீசார் உயிரிழந்த இரு சிறுவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்ச்சி பெற்ற இந்த சிறுவர்கள் சக நண்பர்களுடன் கோடை விடுமுறையை கழிப்பதற்காக ஏரியில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் வயலூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.