திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

பதிவு:2023-05-30 11:17:58



திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் மே 30 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 84 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 49 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 38 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 45 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 76 மனுக்களும் என மொத்தம் 292 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

முன்னதாக கூட்டத்தில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டு, அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி வட்டம், காரணி கிராமத்தை சேர்ந்த நபர் கடந்த ஏப்ரல் 24ஆம் நாள் பாம்பு கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபருக்கு ரூ.10,000 க்கான காசோலையும் வறிய நிலையில் உள்ள 2 நபர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தலா ரூ.5,600 வீதம் ரூ.11,200 மதிப்பிலான தையல் இயந்திரங்களும் என மொத்தம் ரூ.21,200 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு நல வாரிய திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையாக 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000மும் இயற்கை மரணத்திற்கான ஈமச்சடங்கு நிதியாக 37 பயனாளிகளுக்கு ரூ.6.29 இலட்சமும் முதுகுத்தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட 8 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் தலா ரூ.1.05 இலட்சம் வீதம் ரூ.8.44 இலட்சமும் இரு கால்கள் பாதிக்கப்பட்ட 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83,500 வீதம் ரூ.25.05 இலட்சம் மதிப்பீட்டிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களும் என மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ.40 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக தேசிய கிராம நகர திட்டத்தின் கீழ் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், கூடப்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு தலா ரூ.9 இலட்சம் வீதம் ரூ18 இலட்சம் மதிப்பீட்டிலான இரண்டு நடமாடும் உணவக வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி அந்நடமாடும் உணவக வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து, செவ்வாபேட்டை அரசு ஆதிதிராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற செல்வி.பி.பாரதி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 மதிப்பெண்ணுக்கு 578 மதிப்பெண் பெற்று மாநில அளவிலான ஆதி திராவிடர் நல பள்ளிகளில் முதலிடம் பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மதுசூதனன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) சுபலட்சுமி, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர், மகளிர் திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.