பதிவு:2023-06-01 08:37:34
இறந்தவர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் நிதியை வழங்க ரூ.1100 லஞ்சம் வாங்கிய விஏவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு
திருவள்ளூர் ஜூன் 01 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்காவிற்குட்பட் கரிலம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் கற்பகம். இவரது கணவர் பண்டாரி கடந்த 2010-ல் உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து இறந்தவரின் குடும்பத்தாருக்கு அரசால் வழங்கப்படும் இறப்புத் தொகை கேட்டு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கணவர் பண்டாரிக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் இறப்புத் தொகை கேட்டு திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்கா, குமாரராஜபேட்டை கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலுவிடம் மனு செய்துள்ளார்.
இதனையடுத்து மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கற்பகத்தின் உறவினரான சோமசுந்தரம் என்பவர் மனு சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலுவிடம் கேட்டபோது, பணியிலிருந்த அவர் அம்மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ள லஞ்சமாக பணம் ரூ.1.100-ஐ கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புகார்தாரர் கற்பகம் சார்பில் அவரது உறவினர் சோமசுந்தரம் என்பவர் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உள்ள தொகையை பெற்று தருவதற்கு ரூ.1.100/- லஞ்சம் கேட்பதாக புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலு மீது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் வெங்கடேசன் கடந்த 7.6.2010 அன்று வழக்கு பதிவு செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனையில் பேரில் ரசாயனம் தடவிய 1100 ரூபாயை புகார்தாரர் சோமசுந்தரம் என்பவர் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலு பணிபுரியும் அலுவலகத்தில் இருந்த போது கொடுத்துள்ளார். அப்போது லஞ்சப்பணம் ரூ.1,100-ஐ பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்ப காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்து கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலு என்வரின் மீது திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, இந்த வழக்கில் அரசு தரப்பில் அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கினை விசாரித்த திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி ஆர்.வேலரஸ் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலு இலஞ்சமாக பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்திரவிட்டார்.