பதிவு:2023-06-07 21:30:35
திருவள்ளூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள்" என்ற மையக்கருத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் ஜூன் 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள்" என்ற மையக்கருத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் நாள் உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள் என்ற மையக்கருத்தில் உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் "நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள்" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
மேலும், சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த தொழிற்சாலையின் பங்களிப்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நிறுவப்பட்டுள்ள எல்.இ.டி காணொளி திரை மாவட்ட ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நடை பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் காமராஜர் சிலை வரை நடைபெற்றது.
இப்பேரணியில் சுற்றுச்சூழல் துறை அலுவலர்கள், பல்வேறு தொழிற் நிறுவனங்களின் பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக "நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள்" என்ற மையக்கருத்தை வலியுறுத்தியும் மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப்பையுடன் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் இலவசமாக வழங்கினார்.
தொடர்ந்து, ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு பசுமைச் சாம்பியன் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பட்டாபிராம் பகுதியில் உள்ள தர்மமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி "இந்து கல்லூரி" மற்றும் "துவக்கம்" தொண்டு நிறுவனம் ஆகியவற்றிக்கு தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளையும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் கே.ரகு குமார், எஸ்.சபரிநாதன், திருமூர்த்தி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் டி.மணிமேகலை, பல்வேறு தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.