பதிவு:2023-06-07 21:36:50
திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பில் பல கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டு தரக்கோரி போராட்டம் : தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 63 பேர் கைது
திருவள்ளூர் ஜூன் 06 : திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரம் ஐவேலி அகரத்தில் அமைந்துள்ள பானு பி தர்காவுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அனைத்து ஆவணங்களும் கையில் உள்ள நிலையிலும் கோட்டாட்சியர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி கோட்டாட்சியர் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியரை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முன்னதாக திருவள்ளூர் திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள படேமக்கான் மசூதியில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். போலீசார் ஊர்வலத்துக்கு அனுமதி கிடையாது எனக் கூறி ஏஎஸ்பி விவேகானந்த சுக்லா தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தர்காவுக்கு சொந்தமான இடம் என பல்வேறு ஆவணங்களை திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் சமர்ப்பித்தும் அதை அவர் வாங்கக்கூட மறுக்கிறார். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். ஆகையால் அவர் மீதும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் திருவள்ளூர் வட்டாட்சியர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸை சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்டு, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உறுதியளித்தார். இதில் மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் அஸ்ரப், நூர்முகமது, நெல்லை சேக்தாவுது, அசன்னுல்லா, அமீன், உமர், சுராஸ், ஜாகிர்உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்ட தமமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் 63 பேர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.