தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடி மாநகராட்சியில் 14 சுகாதார மையக் கட்டிடம், ஒரு சுகாதார ஆய்வக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

பதிவு:2023-06-07 21:41:13



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடி மாநகராட்சியில் 14 சுகாதார மையக் கட்டிடம், ஒரு சுகாதார ஆய்வக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் : நகர்ப்புற நல வாழ்வு மையத்தை ஆவடி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டனர் :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடி மாநகராட்சியில் 14 சுகாதார மையக் கட்டிடம், ஒரு சுகாதார ஆய்வக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

திருவள்ளூர் ஜூன் 07 : ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மிட்டனமல்லி, சோழம்பேடு, திருமுல்லைவாயல், பருத்திப்பட்டு, தண்டுரை, காமராஜ் நகர் மற்றும் பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.15-வது நிதிக்குழுவின் மானிய நிதி 2021-2022 திட்டத்தின் கீழ் புதியதாக நகர்ப்புற நல வாழ்வு மையக்கட்டிடம் மற்றும் சுகாதார ஆய்வக கட்டிடம் கட்ட ரூ.372.00 இலட்சம் ஒதுக்கீடு செய்து 14 சுகாதார மையக் கட்டிடம் மற்றும் ஒரு சுகாதார ஆய்வக கட்டிடப் பணியானது முழுவதும் முடிக்கப்பட்டுள்ளது.

புதிய நகர்ப்புற நல வாழ்வு மையக் கட்டிடத்தில் மருத்துவர் பரிசோதனை அறைகள், யோகா அறை, புறநோயாளி காத்திருப்பு அறை, இருப்பறை, கழிவறை, குடிநீர் வசதிகள், சாய்வுதளம், மின் விளக்குகள் மற்றும் இருக்கைகள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனை ஆய்வக கட்டிடத்தில் மாதிரி சேகரிப்பு அறை, பரிசோதனை அறை, காத்திருப்பு அறை, கழிவறை, குடிநீர், மின் விளக்கு வசதி போன்றவை இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

திருமுல்லைவாயல் காலனி, விளிஞ்சியம்பாக்கம் கவரப்பாளையம், சேக்காடு பள்ளத்தெரு, பாலேரிப்பட்டு ஆனந்தா நகர், பருத்திப்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செக்டர் 1, பருத்திப்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செக்டர் 2, திருமுல்லைவாயல் தந்தை பெரியார் நகர், மிட்டனமல்லி, கோயில் பதாகை சுவாதி தெரு, உழைப்பாளர் நகர், ரோஜா தெரு, அன்னனூர் கணபதி நகர் பிள்ளையார் கோயில் தெரு, பள்ளி தெரு, தண்டுரை சுகாதார நிலையத்திற்கு சாஸ்திரி நகர், விளிஞ்சியம்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் வளாகம் ஆகிய 15 பகுதிகளில் தலா ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.372 இலட்சம் மதிப்பிட்டில் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மண்டலம் 2-ல் வார்டு எண்.8, திருமுல்லைவாயல் காலனி பகுதியில் புதியதாக நகர்ப்புற நல வாழ்வு மையக் கட்டிடம் தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஆவடி மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மூலம் சுமார் 60,000 பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற விழாவில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ3.72 கோடி மதிப்பீட்டிலான 14 சுகாதார மையக் கட்டிடம் மற்றும் ஒரு சுகாதார ஆய்வக கட்டிடம் உட்பட மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக மொத்தம் ரூ 125 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, அம்மையத்தை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார்,ஆவடி மாநகராட்சி ஆணையாளர் தர்பகராஜ்,துணை மேயர் சூரியகுமார், இணை இயக்குநர் சுகாதாரம் சதீஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் ஜவஹர்லால், செந்தில், மாநகர நல அலுவலர் யாழினி, உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.