பதிவு:2023-06-08 23:40:45
திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, 5 லட்சத்து ரூ.61 ஆயிரம் கொள்ளை: செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை
திருவள்ளூர் ஜூன் 08 : திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் அகிலன்.திருவள்ளூர் - சிடிஎச் முக்கிய சாலையில் தனது தாய் கௌசல்யாவுடன் வசித்து வருகிறார். விவசாயியான அகிலன் நேற்று பூண்டி அடுத்த நெய்வேலி கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றவர் அங்கேயே தங்கியுள்ளார். இதனால் அகிலனின் தாயார் கௌசல்யா என்பவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அதே பகுதியில் உள்ள சித்தி சுகந்தி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தாய் கௌசல்யா மற்றும் சித்தி சுகந்தி ஆகிய இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மகன் அகிலனுக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தரை தளத்தில் தாய் கௌசல்யா தங்கியிருந்த வீட்டில் வைத்திருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த நகை, பணம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பட்டுப்புடவைகள் ஆகியவற்றையும் முதல் தளத்தில் உள்ள அகிலன் வீட்டின் பூட்டையும் உடைத்து, பீரோவில் இருந்த நகை, பணம் என மொத்தம் 40 சவரன் நகை, 5 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணம், 3 கிலோ வெள்ளி, 24 பட்டுப்புடவைகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து அகிலன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களும் சேகரிக்கப்பட்டன. திருவள்ளூர் சிடிஎச் முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.