பதிவு:2022-04-30 15:33:10
ஆவடி மாநகராட்சியில் 28-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் மே 30 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட என்.எம். சாலை, நேரு பஜார் பகுதியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பாக நடைபெறும் 28-வது மாபெரும் கொரோனா சிறப்பு முகாமை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு பேசினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனா நோய்த் தொற்றை படிப்படியாக அகற்றி வரும் பெருமை தமிழ்நாடு முதலமைச்சரையே சாரும்.அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாபெரும் கொரோனா தடுப்பூசி; முகாம் 1,000 தடுப்பூசி மையங்களில் 4,000 பணியாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு முகாம் நடைபெற்று வருகிறது.
இன்று மட்டும் ஒரு இலட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கை எய்த வேண்டும் என்ற பெறும் முயற்சி எடுத்து மாவட்டம் முழுவதும் வேகமாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இருபத்தி ஏழு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 14,49,429 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வயதினருக்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 17,58,291 (93.1சதவிகிதம்), இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 13,96,593 (74.0 சதவிகிதம்), 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 29.04.2022 வரை முதல் தவணையாக 1,03,995 (95.2 சதவிகிதம்), இரண்டாம் தவணையாக 79,943 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ளவர்களில் 29.04.2022 வரை முதல் தவணையாக 53,544 நபர்களுக்கு அதாவது 77.4 சதவிகிதம் கொரோனா தடுப்பூசியும், இரண்டாம் தவணையாக 11,878 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 21,596 ஆகும். மீதமுள்ள முதல் தவணை 1,54,549 நபர்களுக்கும், இரண்டாம் தவணை 4,48,201 நபர்களுக்கும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி தவணை 1,04,674 நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.எனவே இன்று நடைபெறும் இம்மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்தார்.
முகாமில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, மண்டல குழுத் தலைவர் ஜி.ராஜேந்திரன், பூவிருந்தவல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் செந்தில் குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆவடி மாநகராட்சி உதவி பொறியாளர் சத்தியசீலன், ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் (பொ) அப்துல் ஜாபர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.