பதிவு:2023-06-09 15:02:20
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்
திருவள்ளூர் ஜூன் 08 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.அப்பொழுது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது :
திருவள்ளூர் மாவட்டத்தில் என்னென்ன குறைகள் இருக்கின்றது என்பது பற்றியும். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது என்பது பற்றியும் என்னென்ன கோரிக்கைகள் உள்ளது என்பதற்காகவும் தான் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அதனை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். எனவே, நாங்கள் சொல்லுவதை அதிகாரிகளான நீங்கள் நிறைவேற்ற வேண்டும். எனவே, ஒரு பகுதியில் பணிகள் நடைபெறும் போது அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் மூலமாக திட்டங்களை செயல்படுத்தினால் தான் நாங்கள் அப்பணிகளில் ஈடுபட்டிருப்பது மக்களுக்கு தெரியும். தமிழ்நாடு முதலமைச்சர் சிந்தித்து செயல்படும் திட்டங்களை, பணிகளை சாதாரண மக்களுக்கான அடிப்படை வசதிக்கான திட்டங்களை தான் அறிவித்துள்ளார்கள். எனவே, நாம் மக்களுக்கான அடிப்படை வசதிக்கான அத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
எந்த விஷியமானாலும் என்னிடம் தெரிவித்தால் நான் நிச்சயமாக அந்த பணிகளை நிறைவேற்றுவேன். நீங்கள் தெரிவித்த சின்ன, சின்ன குறைகளுக்கும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மூலமாக நிறைவேற்றப்படும். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களுடன் இணைந்து மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். எனவே, முதலில் அனைவரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண்,மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி),எஸ். சுதர்சனம் (மாதவரம்),டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), க.கணபதி (மதுரவாயல்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செ.ஆ.ரிஷப், மாவட்ட வன அலுவலர் ராம் மோகன்,சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.