பதிவு:2023-06-11 14:47:15
திருவள்ளூர் வடக்கு ராஜவீதியில் உள்ள மின்மாற்றி மீது சரக்கு லாரி மோதி விபத்து : 500 கேவி மின்மாற்றி மற்றும் கம்பம் சேதம் : 4 மணி நேர போராட்டத்திற்கு பின் சீரமைப்பு
திருவள்ளூர் ஜூன் 10 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கருக்கு உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி திருவள்ளூர் வழியாக வந்துகொண்டிருந்தது. ஓட்டுனர் ஜார்ஜ் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
திருவள்ளூர் நகர எல்லையான வடக்கு ராஜவீதியில் வந்து கொண்டிருந்த போது முன்னாள் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை திருப்பிய போது அங்கிருந்த மின்மாற்றி மீது லாரி மோதியது. இதில் மின்மாற்றி மற்றும் மின்கம்பம் முழுவதும் சேதமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செயற்பொறியாளர் கனகாரஜ், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் தட்சிணா மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து சேதமடைந்த மின்மாற்றி மற்றும் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டனர்.இந்த சேதம் காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகள் 150-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்வாரிய ஊழியர்கள் போராடி மின்மாற்றியை சீரமைத்து பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கினர்
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் லாரியை திருவள்ளூர் டவுன் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மின்மாற்றியை மாற்றி அமைக்க ரூ. 10 லட்சம் செலவாகும் என்றும் அந்த தொகையை லாரி உரிமையாளரிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.