பதிவு:2023-06-11 14:49:32
திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஃபோக்சோ சட்டத்தின் கீழ் 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா முதன்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருவள்ளூர் ஜூன் 10 : திருவள்ளூர் மாவட்டம் கனகம்மா சத்திரம் அடுத்த காஞ்சிபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் டில்லி (30).டில்லி மீது வழிப்பறி, திருட்டு போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த 8-வது படித்து வந்த 13 வயது சிறுமி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த டில்லி உங்க அப்பாவையும் தம்பியையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அழைத்து சென்றுள்ளான்.
இது குறித்து சிறுமியின் தந்தை கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.இந்நிலையில் பூந்தமல்லி அருகே ஓட்டலில் அறை எடுத்து தங்கி 13 வயது சிறுமியை டில்லி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இந்நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு டில்லியிடமிருந்து தப்பிய சிறுமி திருவள்ளூர் வந்துள்ளார்.
சிறுமியை கனகம்மாசத்திரம் போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் என்பதால் இந்த வழக்கு சம்பந்தமாக திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் டில்லி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இது தொடர்பாக திருவள்ளூர் மகிளா முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.அமுதா ஆஜராகி வாதாடினார்.
விசாரணையின் முடிவில் நேற்று நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பு வழங்கினார். அதன்படி சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 366 சட்ட பிரிவின்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை அடைத்து வைத்ததற்காக 342ஆவது சட்டப்பிரிவின்படி ஓராண்டு சிறை தண்டனையும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 5 எல் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் என 31 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் அபராதமாக 11 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் செலுத்த தவறினால் மேலும் 13 மாதம் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கடுமையான தண்டனை விதித்து உத்தரவிட்டார்.தீர்ப்புக்கு பின் டில்லி புழல் மத்திய சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.