பதிவு:2023-06-13 20:40:55
பெருமாள்பட்டு கிராம உதவியாளர் வீட்டை விட்டு சென்று 44 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை என மனைவி போலீசில் புகார் : செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை
திருவள்ளூர் ஜூன் 12 : திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் மகன் ஆனந்தன் (42). பெருமாள் பட்டு கிராம உதவியாளராக பணியாற்றி வரும் இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் பெருமாள் பட்டு கிராம உதவியாளராக வேலை செய்து வரும் ஆனந்தனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக அடிக்கடி குடிபோதையில் வீட்டை விட்டு செல்பவர் 10 நாட்கள் வரை வெளியே எங்கேயாவது தங்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 28.4.2023 அன்று வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
வீட்டுக்கு வந்து விடுவார் என்று காத்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 44 நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடத்தில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததையடுத்து ஆனந்தனின் மனைவி தனலட்சுமி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கிராம உதவியாளர் ஆனந்தனை தேடி வருகின்றனர்.