பதிவு:2023-06-13 20:51:03
அருள்மிகு வீரராகவ சுவாமி திருக்கோயில் கூட்டரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக மாவட்ட அளவிலான குழுவின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் பதவி ஏற்பு
திருவள்ளூர் ஜூன் 13 : இந்து சமய அறநிலைத்துறை ஆணையரின் பரிந்துரையினை அரசு கவனமாக பரிசீலனை செய்தது. அப்பரிசீலனைக்கு பின்னர் தமிழ்நாடு இந்து சமய அறநிலைக் குடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7A - ன் கீழ் திருவள்ளூர் வருவாய் மாவட்ட எல்லைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46 (III) ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களை தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பதற்கு திருவள்ளூர் வருவாய் மாவட்டத்திற்கு ஐந்து நபர்களை உறுப்பினராக கொண்ட மாவட்ட குழு அமைத்து அரசு கடந்த 30.05.2023 ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி, அருள்மிகு வீரராகவ சுவாமி திருக்கோயில் கூட்டரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட, தகுதி வாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான குழுவினர் பதவி ஏற்பு விழாவை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் .சந்திரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அதன்படி, முதலாவதாக, திருத்தணி, ஜோதி சாமி தெரு பகுதியைச் சேர்ந்த எம்.சி.வெங்கடேஸ்வர பாபு, இரண்டாவதாக கும்மிடிப்பூண்டி வட்டம், ஈக்குவார் பாளையம், பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்த டி.லட்சுமி நாராயணன்,மூன்றாவதாக வெங்கத்தூர், மணவாளநகர், துரைக்கண்ணன் தெரு பகுதியைச் சேர்ந்த க.வெங்கடேஷ், நான்காவது ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்த கோ.கார்த்திகேயன், ஐந்தாவதாக ஆர்.கே. பேட்டை, கதன நகரம், பாலபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர்.மேனகா ஆகியோரை குழு உறுப்பினர்களாக நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது. உறுப்பினர்களில் எம்.சி.வெங்கடேஸ்வர பாபு என்பவரை இக்குழுவின் தலைவராகவும் நியமனம் செய்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர். இக்குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும்.அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட, தகுதி வாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான குழுவினர் பதவி ஏற்பு விழாவில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் அக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (வேலூர்) க.ரமணி, உதவி ஆணையர் (திருவள்ளூர்) கே.சித்ராதேவி, திருவள்ளூர் நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரஸ்வதி, அறங்காவலர் குழு தலைவர் எம்.சி.வெங்கடேஸ்வர பாபு, குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், இந்து சமய அறநிலையங்கள் துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.