திருவள்ளூரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக உலக இரத்த கொடையாளர் தின விழா

பதிவு:2023-06-15 22:02:57



திருவள்ளூரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக உலக இரத்த கொடையாளர் தின விழா

திருவள்ளூரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக உலக இரத்த கொடையாளர் தின விழா

திருவள்ளூர் ஜூன் 15 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக நடைபெற்ற உலக இரத்த கொடையாளர் தின விழாவில் இரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் நாள் உலக இரத்தக் கொடையாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரத்த தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சார முழக்க வாசகங்கள் இடம்பெறும் அந்த வகையில் இவ்வாண்டிற்கான பிரச்சார முழக்கமாக "Give blood, give plasma, share life, share often" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஒருநபர் சராசரியாக ஓர் ஆண்டுக்கு 4 முறை இரத்த தானம் செய்யலாம். இவ்வாறாக இரத்ததானம் செய்வதை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை ரத்ததானம் செய்யும் ஆண்களையும் இரண்டு முறை ரத்த தானம் செய்யும் பெண்களையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டி கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள்.

நாமும் தன்னார்வமாக முன்வந்து இரத்த தானம் செய்து உயிர்களை காக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு அரசு ரத்த வங்கியானது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 400 முதல் 500 அலகு வரை இரத்தம் சேகரிக்கப்படுகிறது. அதை 4 முக்கிய பாகங்களாக பிரித்து 700 முதல் 800 நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களின் உயிர் காக்கப்படுகிறது.

கடந்த 2022-2023 ஆம் ஆண்டு 4841 ஆண்களும் 37 பெண்களும் இரத்த தானம் செய்துள்ளனர். தன்னார்வ இரத்ததான முகாம்கள் மூலமாகவும் மருத்துவமனையிலும் இந்த ரத்தங்கள் சேகரிக்கப்படுகிறது. திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமல்லாமல் இந்த சேவை திருத்தணி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளிலும் இரத்த வங்கிகள் துவங்க மாவட்ட சுகாதாரத்துறை சார்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் 8 இரத்த சேமிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த பரிமாற்று செய்யப்பட்டு உயிர் காக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உலக இரத்த கொடையாளர் தின விழாவில் இரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் இரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியும் தன்னார்வ இரத்தக் கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள "TN- Blood Donor App" என்ற செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாகன ஒட்டுவில்லைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து இவ்வாண்டில் அதிகமுறை இரத்த தானம் செய்த 31 இரத்த கொடையாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இதில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலரும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருமான கே.ஆர். ஜவஹர்லால், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) என்.திலகவதி, காசநோய் துணை இயக்குநர் பி.சங்கீதா, மாவட்ட திட்டமேலாளர் (பொ) கே.எஸ். கௌரிசங்கர், மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் தே.பிரதீபா, குருதி கொடையாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.