பதிவு:2022-05-02 23:25:29
பூவிருந்தவல்லி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பொதுமக்களோடு கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்தார் :
திருவள்ளூர் மே 02 திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், கருணாகரச்சேரி ஊராட்சி கிராம சேவை மைய வளாகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களோடு கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்து, கருத்துகளை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு ஆண்டும், வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டத்தை கூட்டி, அவர்களிடம் உள்ள குறைகளை கண்டறிந்து, அதனை உடனுக்குடன் ஆய்வு செய்யப்படும் வேண்டும் என்று கட்டளை பிறப்பித்ததன் அடிப்படையில் உடனே அதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்து உங்களிடம் இருக்கின்ற குறைகளை கேட்டறிந்தோம்.
கருணாகரச்சேரியில் நீர்த்தேக்க தொட்டி,நெல் கொள்முதல் நிலையம்,துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம்,தரைப்பாலம் வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதற்கு ரூ. 5 கோடி, மேலும் கூடுதலாக ரூபாய் இரண்டு கோடி என ரூ. 7 கோடிக்கு தலைப்பாலத்திற்கான பணி விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது.அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி பார்வைக்கு கொண்டுச் சென்று அதற்கான பணிகளையும் மேற்கொள்வோம். ஆர்.ஓ. பிளாண்ட் குறித்து கேட்டுள்ளார்கள். இதற்கு பூவிருந்தல்லி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தமது சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 இலட்சம் தருவதாக தெரிவித்துள்ளார்கள். சொட்டு நீர் பாசனம் வேண்டுமென்று கேட்டுள்ளார்கள். அதற்கான முயற்சியை மாவட்ட ஆட்சியர் அதற்குண்டான பணிகள் விரைவில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராஜகுளம் என்ற குளத்தை நடைபாதையாக்கி தூர்வாரி, ஆழப்படுத்தி தருமாறு கேட்டுள்ளார்கள். அதற்கும் ஆவடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து நடப்பாண்டு செய்து தரப்படும். அதற்கான பணிகள் மற்றும் மருத்துவமனை கட்டிடம் ரூ. 24 இலட்சத்தில் பிரசவ தடுப்பூசி முகாமிற்கான தனியாக ஒரு கட்டிடம். அதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும்.
இந்த கருணாகரச்சேரி ஊராட்சியில் உள்ள 719 வீடுகளில் 2643 மக்கள் வசிக்கின்றனர். அம்மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மொத்தம் ரூ. 7.65 கோடி மதிப்பீட்டில் கருணாகரச்சேரி ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.முன்னதாக, கருணாகரச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் முழு சுகாதார உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபன், உதவி இயக்குநர் (தணிக்கை) வி.சுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, பூவிருந்தவல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் மரு.செந்தில் குமார், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பரமேஷ்வரி கந்தன், கருணாகரச்சேரி ஊராட்சித் தலைவர் பத்மாவதி,பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.