பதிவு:2023-06-21 20:25:01
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 24-ந் தேதி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஜூன் 21 : தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் 24-ந் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற பல்வேறு துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்கள் அதிகம் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு வட்டாரம் திருவாலங்காடு ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் எல்லாபுரம் வட்டாரம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
இம்முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை,எக்கோ, இசிஜி, பெண்களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படும். மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை ,மகளிர் மருத்துவம்,கண் மருத்துவம் காது மூக்கு தொண்டை,பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படும். இவற்றுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்படும்.
மேற்கண்ட இடங்களில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் பெற்று பயன் பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.