வேப்பம்பட்டில் அரசு உண்டு உறைவிட மாதிரி பள்ளியில் தேர்வாகியுள்ள 160 மாணவ, மாணவியர்களுக்கான கலந்தாய்வு அறிமுக கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

பதிவு:2023-06-22 22:04:06



வேப்பம்பட்டில் அரசு உண்டு உறைவிட மாதிரி பள்ளியில் தேர்வாகியுள்ள 160 மாணவ, மாணவியர்களுக்கான கலந்தாய்வு அறிமுக கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

வேப்பம்பட்டில் அரசு உண்டு உறைவிட மாதிரி பள்ளியில் தேர்வாகியுள்ள 160 மாணவ, மாணவியர்களுக்கான கலந்தாய்வு அறிமுக கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஜூன் 22 : அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கேதுவாக 2021-2022ஆம் கல்வியாண்டில் திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, பஜ்ரங் பொறியியல் கல்லூரி வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்ட சிறப்பு திட்டமான அரசு உண்டு உறைவிட மாதிரி பள்ளியில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்காக தேர்வாகியுள்ள 160 மாணவ- மாணவியர்களுக்கான கலந்தாய்வு அறிமுக கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, தலைமை தாங்கி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் சுமார் 25,000 மாணாக்கர்களும் 11 ம் வகுப்பில் சுமார் 25,000 மாணாக்கர்களும் இருப்பார்கள் அதில் 160 பேருக்கு தான் இங்கேயே தங்கி பல்வேறு நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதில் ஒருவராக நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். இந்த வாய்ப்பை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு சுமார் 15 வயது இருக்கும். இந்த வயதிலேயே முறையாக திட்டமிட்டு படிக்க வேண்டும். வாழ்க்கையில் ஆசைப்படாத நபர்கள் யாரும் இல்லை ஆனால் அதற்காக முறையாக திட்டமிட்டு அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக முனைப்புடன் செயல்படும் நபர்களுக்கு தான் அவை சாத்தியமாகிறது.

இந்த மாதிரி பள்ளியை பொறுத்தவரையில், இதற்கு முன்பு இங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம், விஐடி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களும் சிறந்த பொறியியல் கல்லூரிகளிலும் தற்போது பயின்று வருகிறார்கள். அதில் 8 மாணவர்கள் முக்கிய பாடப்பிரிவுகளில் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 57 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான கட் ஆப் 190 க்கு மேல் 16 மாணவர்கள் பெற்றுள்ளனர். மேலும், நீட் தேர்வில் 56 மாணவர்கள் தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது மாதிரி பள்ளியில் மாணவ மாணவியர்கள் தங்குவதற்கு வசதியான விடுதிகள் உள்ளது மேலும் அனுபவம் வாய்ந்த அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது மாணவர்களுக்கு இனிய ஒளி வகுப்பும் மூலமாக நடத்தப்படுகிறது. மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நூலக வசதியும் இங்கு உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி செல்வதற்கான தக்க வழிகாட்டுதல்கள் அதற்கான விண்ணப்பகட்டணத்தை அரசே செலுத்துகின்றது. ஆகவே, இந்த வாய்ப்பை நீங்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் கடந்த கல்வியாண்டுகளில் படித்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலும் விஐடி பல்கலைக்கழகத்திலும் பல்வேறு சிறந்த பொறியியல் கல்லூரிகளிலும் கலந்தாய்வு மூலம் சேர்ந்து பயின்று வரும் முன்னாள் மாணவ- மாணவியர்கள் தங்கள் அனுபவங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் தற்போது 11ஆம் வகுப்பு சேர்க்கைக்காக வருகை புரிந்துள்ள மாணாக்கர்களிடையே பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முன்னாள் மாணவ-மாணவியர்களை பாராட்டி, அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் செ.தேன்மொழி, பஜ்ரங் பொறியியல் கல்லூரி நிறுவனர் எம்.ஜி.பாஸ்கரன், தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், பவானி, ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள்,பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.