பதிவு:2023-06-27 23:37:10
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பி.சி.ஏ முடித்த நரிக்குறவ இனப் பெண் வேலை கேட்டு மனு
திருவள்ளூர் ஜூன் 27 : இந்தியா முழுவதும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் இன மக்கள் எம்பிசி பட்டியலில் சேர்க்கப்பட்டு சாதி சான்றிதழ் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர் ஆகிய இனங்களை எஸ்டி பிரிவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது
இதனையேற்ற மத்திய அரசு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர் ஆகிய இனங்களை எஸ்டி வகுப்பில் இணைத்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறேவேற்றியது. இந்த சட்டத்தை உடனடியாக நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் பழங்குடியினருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் ஜெயாநகர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ஜெரினா. இவர்களது மகள் ஜோதிகா பிசிஏ படித்து முடித்துள்ளார். பழங்குடியினருக்கான சாதி சான்றிதழும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஜோதிகா வேலை கேட்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2022-ல் பி.சி.ஏ படித்து முடித்து உள்ளேன். அரசு வேலை வாய்ப்புக்காக முயற்சித்து வருகிறேன். எம்பிசி பிரிவில் இருந்து வேலை கிடைப்பதில் சிரமம் இருந்தது. தற்போது எஸ்டி பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைத்திருப்பதால் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வேலை வாய்ப்பை எளிதில் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆலோசனையும் வழங்கியுள்ளனர். நரிக்குறவ இனப் பெண்ணான நான் பிசிஏ படித்து முடித்த நிலையில் எனக்கு அரசு வேலை வழங்கும் பட்சத்தில் வருங்கால சந்ததியினரும் நன்றாக படித்து நல்ல நிலையில் வாழ முன்னுதாரணமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.