பதிவு:2023-06-27 23:39:07
திருவள்ளூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல அரசு பேருந்து வராததால் 50-க்கும் மேற்பட்டோர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் நேரில் முறையீடு : பணிமனை மேலாளரிடம் பேசி உடனடி நடவடிக்கை
திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்டம் கொப்பூர், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருவள்ளூர் தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூரில் இருந்து கொப்பூர், பாப்பரம்பாக்கம், நயப்பாக்கம் வழியாக பூந்தமல்லிக்கு அரசு பேருந்து சேவையை எம்எல்ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் பேருந்து சேவை தொடங்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே அப்பகுதிக்கு பேருந்து சேவையை திருவள்ளூர் பணிமனை நிர்வாகத்தினர் நிறுத்தியதால் அப்பகுதியிலிருந்து பள்ளிக்கு செல்வதற்காக நேற்று 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வெகு நேரம் காத்திருந்தும் பேருந்து வரவில்லை.
இதுகுறித்து திருவள்ளூர் எம்எல்ஏ. வி.ஜி ராஜேந்திரனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் எம்எல்ஏ. வி.ஜி.ராஜேந்திரன் உடனடியாக பணிமனை மேலாளரை நேரில் சந்தித்தார். அப்போது அப்பகுதியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருவதாகவும் அந்த கிராமங்களிலிருந்து திருவள்ளூர் அல்லது பூந்தமல்லிக்கு செல்வதற்கு சுமார் 20 கிலோ மீட்டர் நடந்து செல்லவேண்டி உள்ளது. எனவே அப்பேருந்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் தாமதமானதால் திருவள்ளூர் பணிமனையிலிருந்து மாணவர்களுக்கு அரசு பேருந்தை தயார் செய்து தண்டலம் பகுதியில் உள்ள பள்ளிக்கு பேருந்தை அனுப்பி வைத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.
மேலும் எம்எல்ஏவுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிமனைக்கு வந்தது மட்டுமல்லாமல் பணிமனையில் இருந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பியதற்கும் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனுக்கு பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.