பதிவு:2023-07-13 21:00:00
செம்பரம்பாக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் : 292 பயனாளிகளுக்கு ரூ.27.03 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், செம்பரம்பாக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பல்வேறு துறைகளின் சார்பாக 292 பயனாளிகளுக்கு ரூ.27.03 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட செம்பரம்பாக்கம் கிராமத்தில் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் அரங்குகள் வாயிலாக அத்திட்டங்களில் பொதுமக்கள் நேரடியாக பயன் பெறுவதற்கு ஏதுவாகவும் இவ்வரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் தமிழகமெங்கும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை பொறுத்த வரைக்கும் அதில் விண்ணப்பம் கொடுப்பதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் அடுத்த மாதத்திலிருந்து இதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளது.கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக என்று தனியாக ஒவ்வொரு கிராமத்திலும் சிறப்பு முகாம்கள் அரசு மூலமாக நடத்தப்படவுள்ளது. அந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் வந்து மனு கொடுப்பதற்காக என்று டோக்கன் வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அந்த டோக்கன் உள்ளது. அந்த டோக்கன் கொடுக்கும் நாளில் நீங்கள் வந்து விண்ணப்பம் செய்ய வேண்டும். எதற்காக அரசு இத்திடத்திற்காக தகுதிகளை நிர்ணயித்துள்ளது என்றால் அரசின் பணம் என்பது மக்களின் வரிப்பணம் அவை சரியான பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும் என்றும் ஏழை எளியவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையிலும் அரசு சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் பயனாளிகள் இத்திட்டம் மூலமாக பயனடைவர் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
முன்னதாக முகாமில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அக்கோரிக்கை மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, இம்முகாமில் நடைபெற்ற பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
முகாமில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு, வருவாய் கோட்டாட்சியர் மை.ஜெயராஜ பௌலின், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எம்.ஜெயக்குமார், பூவிருந்தவல்லி வட்டாட்சியர் ஆர்.மாலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.காந்திமதிநாதன், எம்.ராம்குமார், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.