பதிவு:2023-07-15 14:54:07
பூந்தமல்லியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
திருவள்ளூர் ஜூலை 15 : பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 சென்ட் நிலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன் படுத்தி வந்தனர்.இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாததால் இந்து அறநிலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தது. இதையடுத்து இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில் செயல் அலுவலர் மாதவன் மேற்பார்வையில் வந்த கோயில் ஊழியர்கள் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.
தற்போது ரூ.25 கோடி மதிப்புள்ள 90 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது அத்து மீறுவது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. முன்னதாக அந்தப் பகுதியில் கட்டிடங்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.