பதிவு:2023-07-21 20:10:05
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு இரண்டு ஜெனரேட்டர் பெட்டிகள் : தனியார் தொழிற்சாலை சார்பில் வழங்கப்பட்டது
திருவள்ளூர் ஜூலை 21 : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 2700 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. இதனால் இந்த மருத்துவமனையில் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சிறந்த சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் பெற வருகின்றனர்.இருப்பினும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை அடுத்து திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் இரண்டு ஜெனரேட்டர் பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மருத்துவ கல்லூரி முதல்வர் திலகவதி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் தனியார் தொழிற்சாலை நிர்வாகி விவேக் வான்மீக நாதன் இரண்டு ஜெனரேட்டர் பெட்டிகளை வழங்கினார்.
இதில் தனியார் தொழிற்சாலை நிர்வாகிகள் மீனாட்சி ரமேஷ், இரா.வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஜெனரேட்டர்கள் வழங்குவதன் மூலம் மருத்துவமனையில் உள்ள ஆபரேஷன் தியேட்டர்கள், ஐசியூக்கள், அத்தியாவசிய உயிர்காக்கும் கருவிகள் மற்றும் மருத்துவமனையின் பிற பிரிவுகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதன் மூலம் சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.