பதிவு:2023-07-24 23:03:31
திருத்தணி நகரத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சாலையில் படுத்துக்கொண்டு ரகளை, காவல்துறைக்கு சவால் விட்டு, கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு
திருவள்ளூர் ஜூலை 22 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர்,அதில் ஒரு இளைஞர் காலில் காயம்பட்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர்கள் செல்வதை கண்டவுடன்,போலீசார் தடுத்து விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சாலை நடுவில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அடிபட்ட இளைஞரை சாலையில் படுக்க வைத்து அந்த இளைஞர் சாலையில் படுத்து கொண்டு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் என் இரு சக்கர வாகனத்தில் நான் ரேஸ் செய்கிறேன்.முடிந்தால் நீங்களும் என்னோடு ரேஸ் செய்து போட்டியில் வெல்லுங்கள். எனது இருசக்கர வாகனத்தை விட்டு விடுகிறேன் என்று போலீசாருக்கு பகிரங்கமாக சேலஞ்ச் செய்தனர்.
மேலும் இந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் செய்வதறியாமல் அவர்களை வீடியோ படம் எடுத்தனர். இதனை கண்டவுடன் மீண்டும் கோபமடைந்த அந்த மூன்று இளைஞர்கள் போலீசாருக்கு என்ன செய்ய முடியும் என்று தகாத வார்த்தைகளை கூறி இரு சக்கர வாகனத்தில் இருந்த ஆர்சி புக் மற்றும் முக்கிய ஆவணங்களை காட்டி இதுதான் எனது அடையாளம் என்ன வேண்டும் என்றாலும் வழக்கு போட்டுக்கொள்.திருத்தணியில் நான் பெரிய ஆள். உன்னை தொலைத்து விடுவேன் என்று போலீசாரை பகிரங்கமாக மிரட்டினர்.
அந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் பட்டப்பகலில் சாலையில் படுத்து கொண்டு முக்கிய அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சாலையில் செய்த ரகளையால் போலீசார் ஐந்து பேர் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து நின்றனர். நீண்ட நேரத்திற்கு பிறகு ரகளையில் ஈடுபட்ட கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். திருத்தணியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதன் காரணமாக இளைஞர்கள் இப்படி நடந்து கொள்வதாக பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர் .மேலும் போலீசாருக்கு மிரட்டல் விடுத்து கஞ்சா போதையில் ரகளை செய்த அந்த மூன்று இளைஞர்கள் யார்? என்பது குறித்து போலீசார் எடுத்த வீடியோவை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.