பதிவு:2023-07-26 09:04:53
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தந்தையின் கனவை நனவாக்கிய பத்தாம் வகுப்பு மாணவி : 2026 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது லட்சியம் எனவும் பேட்டி
திருவள்ளூர் ஜூலை 25 : திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சார்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் ஆர்.பி.கீர்த்தனா என்ற மாணவி டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் 81 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு 177 கிலோ பளுவினை தூக்கி தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கும் திருவள்ளூர் மாவட்டத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பள்ளியின் தாளாளர் சுடலை முத்து பாண்டி,முதல்வர் சதிஷ் மற்றும் ஆசிரியர்கள் மலர் கொத்து கொடுத்தும் பேண்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதையடுத்து அப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் செல்பிக்கள் எடுத்துக் கொண்டனர். மேலும் பாராட்டு விழாவில் பேசிய மாணவி கீர்த்தனாவின் தந்தை புருஷோத்தமன் தான் சிறுவயது முதல் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள மிக ஆர்வத்தோடு பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் பளு தூக்கும் போது எடை கூட்டி கூட்டி தூக்கும் போது தனது தோள்பட்டை விரிந்து பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
தன்னுடைய பல ஆண்டு கால கனவு வீணாகி போன நிலையில் வீட்டில் இருக்கும்போது இது குறித்து மனவேதனையுடன் அடிக்கடி தனது ஆதங்கத்தை தெரிவித்து வந்துள்ளார் . இதைக்கேட்ட இவரது மகள் கீர்த்தனா 12 வயது முதல் பளு தூக்கும் உடற்பயிற்சியை மேற்கொண்டு தற்போது டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் போது, தன்னையும் அறியாமல் அவரது கண்களில் நீர் வழிந்தது. அதேபோல் தந்தை பேசிக் கொண்டிருக்கும் போது மாணவியின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. இதை பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து பேசிய மாணவி தனது தந்தை பளு தூக்கும் பயிற்சி எடுத்து வந்தாகவும் அது நிறைவேறாமல் போனதால் அவரது கனவை நிறைவேற்றும் விதமாக தான் 12 வயது முதல் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டு தற்போது டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளது மிகவும் சந்தோஷம் அளிப்பதாகவும், தனது தந்தை மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.மேலும் 2026 இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வென்று சாதனை படைப்பேன் எனவும் அதற்கு அரசு அனைத்து ஒத்துழைப்புகளையும் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.