பதிவு:2023-07-26 09:06:57
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
திருவள்ளூர் ஜூலை 25 : திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஊராட்சி மன்றத்தின் எவ்வித அனுமதி இன்றி ஏர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமான டவர் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியிருப்பு பகுதியின் மத்தியில் செல்போன் டவர் அமைக்கப்படுவதால் கதிர் வீச்சினால் மக்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். திருவள்ளூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செல்போன் டவர் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் உறுதியாக தெரிவித்ததை எடுத்து தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.