பதிவு:2023-08-14 20:21:38
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வசதியாக முதல் நடைமேடையில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் அமைக்கவும் 1, 3, 4-வது நடைமேடையில் லிப்ட் வசதியும் அமைக்க பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருவள்ளூர் ஆக 14 : சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணிக்கு புறநகர் மின்சார ரயில்களும் , காட்பாடி, திருப்பதி , மும்பை, பெங்களூர், விரைவு ரயில்களும், என நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்றும் கடந்தும் செல்கின்றன.
மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சம் பேர் வரை திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால் ஆண்டுக்கு ரூ.15 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.திருவள்ளூரிலிருந்து சென்னைக்கும், அரக்கோணத்திற்கும் செல்லும் ரயில்கள் அதிகளவில் பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரயில் நிலையமாக இந்த திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது.
அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், அதே போல் மாலை 4 மணி முதல் 10 மணி வரையிலும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகள் உள்ளன.இரு புறமும் நடைமேடை நடுவில் மேம்பாலம் இருந்தும் ஒரு சிலரைத் தவிர ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் என அனைத்து பொது மக்களும் ரயில் தண்டவாளத்தை கடந்து தான் சென்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து கடந்த 2019-ல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை, மற்றும் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடை, முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாததால் அவர்களின் வசதிக்காக லிப்ட் வசதி, ஆகியவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் மூன்றாவது நடைமேடையில் மட்டும் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடை அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதையும் கட்ட ஆரம்பித்து நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது செயல்பட தொடங்கியது.
இதில் சென்னையில் இருந்து வரும் புறநகர் ரயில்கள் இரண்டாவது நடைமேடையில் வந்து நிற்கும் போது ம் திருத்தணி மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் திருவள்ளூரில் நிற்கும்போதும் அதில் வரும் பயணிகள் இந்த எஸ்கலேட்டரை பயன்படுத்துகின்றனர்.
அதே நேரத்தில் சென்னையில் இருந்து அரக்கோணம் திருத்தணிக்கு செல்லும் புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நான்காவது நடைமேடையில் நிற்கும் போது அதிலிருந்து இறங்கும் பயணிகள் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதி இல்லாததால் நீண்ட தூரம் நடந்து வந்து சுரங்கப்பாதை வழியாக வெளியேறிய வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட தூரம் நடந்த சென்று சுரங்கப்பாதை வழியை கடக்க முடியாமல் உயர்மட்ட பாலத்தை ஆபத்தான முறையிலும் சிரமத்துடனும் கடந்து வரக்கூடிய நிலை உள்ளது.
எனவே அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அந்த நிதியில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக முதல் நடைமேடை மற்றும் மூன்றாவது நான்காவது நடைமேடையிலும் லிப்ட் வசதியும் முதல் மற்றும் நான்காவது நடைமேடையில் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.