பதிவு:2023-08-15 12:03:30
திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை செல்லும் ட்டி 1 அரசு பேருந்து சேவையை மீண்டும் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் ஆக 15 : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியகுப்பம், மணவாளநகர் போன்ற பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்றுக் கணக்கான மாணவ மாணவிகள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகிலிருந்து புறப்படும் ட்டி 1 என்ற அரசுப் பேருந்தில் பயணித்து பள்ளிக்கு செல்வதுண்டு. அரசு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து அட்டையும் வழங்கப்பட்டு வருவதால் மாணவ மாணவிகள் இலவசமாக பயணித்து வந்தனர். திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை வரும் பேருந்தில் செல்லும் மாணவ மாணவிகள் அங்கிருந்து சுலபமாக பள்ளிக்கு சென்று வந்தனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை செல்லும் ட்டி1 என்ற அரசுப் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் மாணவ மாணவிகள் தனியார் பேருந்து அல்லது ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.எனவே ரயில் பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் வசதிக்காக பேருந்துகளை மீண்டும் ட்டி1 பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் தொகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உத்தரவின் பேரில் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேருவின் அறிவுறுத்தலின் படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், திருவள்ளூர் மண்டலத்தின் சார்பில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனின் முயற்சியால் நேற்று முதல் ட்டி1 திருவள்ளூர் ரயிலடி-தோடி பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனால் தேரடி -ரயிலடி வழித்தடத்தில் நாள்தோறும் தேரடியில் இருந்து 41 புறப்பாடும் ரயிலடியில் - இருந்து தோடிக்கு 41 முறையும் மொத்தமாக 82 பயண நடைகள் தினசரி 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதியும் உண்டு என்றும் தெரிவித்தார் . இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், நகரமன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், திருவள்ளூர் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் எஸ். நெடுஞ்செழியன், துணை மேலாளர் கே.ஸ்ரீதர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.