பதிவு:2023-08-15 12:05:58
திருவள்ளூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து முதியவர் சம்பவ இடத்திலேயே பலி : அரசு பெண் ஊழியர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை
திருவள்ளூர் ஆக 15 : திருவள்ளூர் அடுத்த காக்களூர், பூங்கா நகர், கனகாம்பரம் பூ தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (65) இவரது மகன் கார்த்திகேயன். மருமகள் மனைவி சுதானா(38). கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். மருமகள் சுதானா திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனால் சுதானாவை மாமனார் பச்சையப்பன் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உழவர் சந்தை அருகே செல்லும்போது பின்னால் வந்த மணல் லாரி பச்சையப்பன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பச்சையப்பன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியானார்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் படுகாயம் அடைந்த சுதானவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவகாந்தி அரசு மத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்தில் இறந்த முதியவர் பச்சையப்பன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.