பதிவு:2023-08-15 14:36:45
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஆக 15 : தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடர்ச்சியாக இரண்டாம்கட்ட குடற்புழு நீக்க நாள் 17.08.2023 (வியாழக்கிழமை) அன்றும் மற்றும் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 24.08.2023 (வியாழக்கிழமை) அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு (கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது.இதன் மூலம் இரத்த சோகை சத்துக் குறைபாடு, சோர்வு, பசியின்மை, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 701243 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 220122 பெண்களுக்கு அல்பெண்டோசொல் மாத்திரைகள் வழங்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது.
1 முதல் 2 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு - அல்பெண்டசோல் 1/2 மாத்திரை (200 மில்லி கிராம்), 2 முதல் 19 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு -அல்பெண்டசோல் 1 மாத்திரை (400 மில்லி கிராம் ), 20 முதல் 30 வயதுவரை உள்ள பெண்களுக்கு (கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அல்பெண்டசோல் 1 மாத்திரை (400 மில்லி கிராம்) என்ற விகிதத்தின்படி அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படும்.
சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு உண்ணுதல், நகங்களை வெட்டி கைகளை சுத்தமாக வைத்திருத்தல், காய்கறி பழங்களை கழுவிய பின் உட்கொள்ளுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிவறைகளை பயன்படுத்துதல், உணவுக்கு முன்னும் கழிவறை பயன்படுத்திய பின்னும் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் குடற்புழு தொற்றிலிருந்து அனைவரையும் பாதுக்காக்கலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1428 பள்ளிகளிலும், 456 தனியார் பள்ளிகளிலும், 68 கல்லூரிகளிலும்,1756 அங்கன்வாடி மையங்களிலும், 63 குழந்தை இல்லங்களிலும் மொத்தம் 3771 மையங்களில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக வழங்கப்படுகிறது. எனவே அனைவரும் இந்த குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.