பதிவு:2023-08-26 12:11:36
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு அவசரகதியில் திறக்கப்பட்ட சுரங்கப்பாதையில் சிறு மழைக்கே ஒழுகுவதால் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம் :
திருவள்ளூர் ஆக 25 : சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இவ்வழியாக, புறநகர் மின்சார ரயில் மற்றும் திருப்பதி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.திருவள்ளூரில் இருந்து தினமும், ஒரு லட்சம் பயணிகள் வரை ரயிலில் பயணம் செய்கின்றனர். இங்கு, ரயில்கள் நின்று செல்ல, ஆறு நடைமேடைகள் உள்ளன.இதை கடக்க சுரங்கப்பாதை 5 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு தண்டவாளத்தையும் கடக்கும் வகையில், 250 மீட்டர் நீளம், 15 அடி அகலத்தில் கட்டப்பட்டு உள்ளது.
இந்த சுரங்கப்பாதை சமீபத்தில் அவசர கதியில் திறக்கப்பட்டது. எந்த விஐபிக்களும் இல்லாமல் அதிகாரிகளே சுரங்க பாதையை திறந்து வைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சுரங்கப்பாதை கூரை ஒழுகி தேங்கி நிற்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சுரங்கப் பாதையில் எந்த வசதியும் இல்லை. மாற்றுத்திறனாளிகள், கடப்பதற்கான தனிப்பாதை அமைக்கப்படவில்லை.அவர்கள் படியில் தான் தவழ்ந்து வரவேண்டிய அபாய நிலை உள்ளது.
மேலும் சுரங்கப்பாதையில் சுவற்றில் அமைக்கப்பட்ட மின்விளக்கு மேல் மழை நீர் சாரை சாரையாக ஒழுகி மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது . இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது.
அதுமட்டுமில்லாமல் பல கோடி ரூபாய் செலவு செய்தும் சுரங்கப் பாதையில் இருந்து எந்த நடை மேடைக்கு, எப்படி செல்ல வேண்டும் என்ற வழிகாட்டி பலகை பொறுத்தவில்லை, சிறிய வெள்ளை தாளில் பேனாவைக் கொண்டு எழுதி ஒட்டி வைத்திருப்பதால் எப்போது அந்த பேப்பர் விழும்.பயணிகள் எப்படி குறிப்பிட்ட பிளாட்பாரத்திற்கு செல்வார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பயணிகள் வசதிக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட சுரங்கப்பாதை முறையாக செய்யப்படாததால் இது போன்ற நிலை ஏற்பட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.